search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவாரூரில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்"

    நாடு முழுவதும் 72-வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதேபோல் திருவாரூரில் மாவட்ட விளையாட்டரங்கில் இன்று சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. #IndependenceDayIndia
    திருவாரூர்:

    நாடு முழுவதும் 72-வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதேபோல் திருவாரூரில் மாவட்ட விளையாட்டரங்கில் இன்று சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் மூவர்ண தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் சமாதானத்தை வலியுறுத்தம் `வெள்ளை புறாக்களை'கலெக்டர் பறக்க விட்டார்.

    இதையடுத்து போலீசாரின் மிடுக்கான அணி வகுப்பு நடந்தது. போலீசாரின் அணிவகுப்பை கலெக்டர் நிர்மல்ராஜ் பார்வையிட்டு ஏற்றுக்கொண்டார். பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகள் 11 பேருக்கு அவர்களது சேவை யை பாராட்டி கலெக்டர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். விழாவில் பல்வேறு துறை சார்பில்  57 பயனாளிகளுக்கு ரூ.38லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் நிர்மல்ராஜ் வழங்கினார். 

    இதையடுத்து காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 15 போலீசாருக்கும், சிறப்பாக பணியாற்றிய 81 அரசு அலுவலர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    விழாவையொட்டி பள்ளி- கல்லூரி மாணவ- மாணவிகள் பங்கேற்ற கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. மாணவர்களின் வீரதீர சாகச போட்டிகள் நடந்தது. மேலும் மைதானம் முழுவதும் வண்ண வண்ண பலூன்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்தி மணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து, மற்றும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி தனபால், அனைத்து அரசுத்துறை அதிகாரிகள், பொதுநல அமைப்பினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

    இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் அரசு துறை அலுவலகங்கள், கோர்ட்டுகள், அரசு பள்ளிகள், போலீஸ் நிலையங்கள், தீயணைப்பு நிலையங்கள்உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
    திருவாரூர் மாவட்டத்தில் இன்று 430 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.

    நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் கலெக்டர் சுரேஷ்குமார் தேசியக்கொடியை ஏற்றிவைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். 8 தியாகிகளை கவுரவித்து, பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்தார்.

    விழாவில் வருவாய்த்துறையில் ஒருவருக்கு தங்கப்பதக்கம் உட்பட 4 நபர்களுக்கும், நாளைய அப்துல் கலாம் விருது வென்ற மாணவன் ஒருவருக்கும், சர்வதேச அளவில் நடைபெற்ற பள்ளிகளுக்கிடையேயான போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற வீரர் வீராங்கனைகள் 6 பேர் உட்பட 36 பேருக்கு  சான்றிதழ்களை வழங்கினார்.

    63 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 65 லட்சத்து 17 ஆயிரத்து 620 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். விழாவில் மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர் விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், சப்-கலெக்டர் கமல் கிஷோர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், பயிற்சி கலெக்டர் மன்சூர், மற்றும் பலர் கலந்துக் கொண்டனர். #IndependenceDayIndia 
    ×